சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் பின்னால் வந்த லாரி ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். பேனர் அடித்து கொடுத்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. ஆனால் சாலையின் நடுவில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது
இந்த நிலையில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து சுறுசுறுப்பாகிய போலீஸார் அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஜெயகோபால் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்ய போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு ஜெயகோபால் இல்லாததால் ஏமாற்றம் போலீசார் அடைந்தனர்.
இந்த நிலையில் ஜெயகோபால் தலைமறைவாக இருப்பதாக கருதப்படுவதால் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக ஜெயகோபாலை போலீசார் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது