கிளிகளை கூண்டுக்குள் அடைத்து வைத்து ஜோசியம் பார்த்த ஜோசியர்களை போலீஸார் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள காடு, வயல்வெளி, தோட்டங்களில் இருந்து சிலர் பச்சைக்கிளிகளை பிடித்து வந்து இறக்கைகளை வெட்டி கூண்டுக்குள் அடைத்து ஜோசியத்தில் ஈடுபடுவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர் மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை, அர்சுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கூண்டுகளில் கிளிகளை அடைத்து வைத்து பயணிகளிடம் ஜோசியம் பார்த்து வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களை பிடிக்க முயன்றபோது காவலர்களை கண்டதும் கிளி ஜோசியர்கள் நாலாபுறமும் தெறித்து ஓடியுள்ளனர். விரட்டி பிடித்த போலீஸார் 7 கிளி ஜோசியர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும், மாமல்லபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஜோசியம் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் காப்பு காட்டில் விடப்பட்டன.