புதுவையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாத நிலையில் புதுவையில் இன்று முதல் பெட்ரோல் மீதான வாட் வரி உயர்த்தப்படுகிறது.
இதுவரை பெட்ரோல் மீதான வாட் வரி 14.55 சதவீதத்தில் இருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 உயர்த்தப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் புதுவையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. புதிய விலை குறித்த விவரங்கள் இதோ:
புதுவையில் பெட்ரோல் விலை இன்று முதல் ரூ.94.26-லிருந்து ரூ.96.26 ஆகவும், காரைக்காலில் ரூ.94.03-லிருந்து ரூ.96.03 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை ரூ.84.48-லிருந்து ரூ.86.48 ஆகவும், காரைக்காலில் ரூ.84.31-லிருந்து ரூ.86.31 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும் மாகியில் பெட்ரோல் விலை ரூ.91.92-லிருந்து ரூ.93.92 ஆகவும், டீசல் விலை ரூ.81.90-லிருந்து ரூ.83.90 ஆகவும், ஏனாமில் பெட்ரோல் விலை ரூ.94.92-லிருந்து ரூ.96.92 ஆகவும், டீசல் விலை ரூ.84.75-லிருந்து ரூ.86.75 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.