தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்செல்வனை விரட்டி அடித்த பொதுமக்கள்!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (09:18 IST)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் தங்க தமிழ்செல்வன் இவரை அந்த தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் அடித்து விரட்டியுள்ளனர்.


 
 
தங்க தமிழ் செல்வன் அதிமுகவின் தினகரன் அணியில் உள்ளார். தினகரன் ஆதரவாளர்களில் மிகவும் முக்கியமானவர் இவர். எடப்பாடி அணியில் இருந்து தினகரன் அணி பிரியும் முன்பே தினகரனின் தீவிர விசுவாசியாக ஊடகங்களில் வலம் வந்தவர் தங்க தமிழ் செல்வன்.
 
இவரது ஆண்டிப்பட்டி தொகுயின் கண்டமனூர் அருகே பரமசிவம் என்ற கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தான் அந்த ஊர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதரமாக உள்ளது. ஆனால் தற்போது மழை இல்லாததால் அவர்கள் குடிநீருக்கே கஷ்டப்படுகின்றனர்.
 
இதனையடுத்து மழையில்லாமல் வறண்டு போய் இருக்கும் அந்த கண்மாய்யை தூர்வார எம்எல்ஏ தங்க தமிழ் செல்வனிடம் ஊர் மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
இதனையடுத்து கண்மாய்யை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஊர் மக்கள் பொதுக்கூட்டம் போட்டு ஓவ்வொரு வீடாக நிதி திரட்டி கண்மாய்யை தூர்வாரா முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென தனது ஆதரவாளர்களுடன் எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கண்மாய் தூர்வாரு பணியை பார்வையிட சென்றுள்ளார்.
 
அப்போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி எம்எல்ஏ தங்க தமிழ் செல்வனை முற்றுகையிட்டு, கண்வாய் தூர்வாரா நிதி ஒதுக்காத எம்எல்ஏவை கண்மாயில் கால் வைக்க விடமாட்டோம் என கூறி ஊரில் இருந்து விரட்டி அடித்ததாக தகவல்கள் வருகிறது.
அடுத்த கட்டுரையில்