நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவன் தப்பியோட்டம்!? – விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (15:33 IST)
சென்னை மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மேலும் பல மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பட்டப்படிப்பில் சேர்ந்த குற்றத்திற்காக சென்னை மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். ஆள்மாறாட்டம் செய்ய உதவி செய்த இடைத்தரகரை விசாரித்தபோது மேலும் பலர் இதுபோன்ற ஆள்மாறாட்டத்தை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களையும், ஒரு மாணவியையும், அவர்கள் தந்தையர்களையும் கைது செய்தனர். இதனால் நீட் முறைகேடு வழக்குகள் தீவிரமடைந்தன. இதனால் மருத்துவ கல்லூரிகளை தங்களது மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து தருமபுரி மருத்துவ கல்லூரி தங்களது மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தன. ஆவண சரிப்பார்ப்புக்கு இர்ஃபான் என்ற மாணவன் மட்டும் வரவில்லை. விடுதியில் தங்கி படித்த இர்ஃபான் அறுவை சிகிச்சைக்காக ஊருக்கு செல்வதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆவண சரிப்பார்ப்புக்கு அவரை வர சொல்லி தகவல் அனுப்பியும் அவர் வரவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இர்ஃபான் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பிருப்பதாக தகவலறிந்த போலீஸ் உடனடியாக விமான நிலையங்களுக்கு இர்ஃபான் குறித்த தகவல்களை தெரிவித்து உஷார்ப்படுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து நீட் ஆள்மாறாட்டத்தில் இத்தனை மாணவர்கள் ஈடுபட்டிருக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்