டீ, காபி குடிக்காதீங்க.. மதியம் வெளிய வராதீங்க! – அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (08:56 IST)
தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் காரணமாக நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. சேலம் உள்பட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க பழச்சாறு, இளநீர் என அருந்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கான அறிவுரைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். வெயில் மற்றும் வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர் “வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். வெயில் சமயத்தில் டீ, காபி மற்றும் செயற்கை பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள தர்பூசணி, இளநீர், நுங்கு உள்ளிட்ட இயற்கையான உணவுகளை சாப்பிட அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தர்பூசணி, மாம்பழம் உள்ளிட்ட சீசன் பழங்களை ரசாயனம் சேர்த்து பழுக்க வைப்பதாக கண்டறியப்பட்டால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்