நம்பிக்கையில்லா தீர்மானம் - களம் இறங்கும் மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (12:29 IST)
தமிழகத்தின் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி சட்டமன்றத்தில் திமுகவின் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றினைந்துள்ளது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் தினகரன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.  
 
இந்நிலையில், இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அதில், முதல்வர் மீது தமிழக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். நாங்களும் நம்பிக்கை இழந்துவிட்டோம். அதனால் அவருக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறோம். முதலமைச்சர் என்பவர் பாரபட்சமாகவும், நேர்மையானவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், 2011ம் ஆண்டில் கர்நாடகாவில் எடியூரப்பா சந்தித்த சூழலை உதாரணமாக கொள்ளும்படியும் கடிதத்தில் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும், ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
 
இது எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியையும், தமிழக அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி திமுகவின் சார்பில் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏனெனில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் “ இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆளுநரே சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். இல்லையேல், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவது குறித்து திமுக முடிவெடுக்கும்” எனக் கூறியுள்ளார்.
 
ஏனெனில், ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். மொத்தமுள்ள 136 அதிமுக எம்.எல்.ஏக்களில் தினகரன் பக்கம் 19 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். மீதமுள்ள 117 பேர் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். ஆட்சி அமைக்க இது போதும் என்றாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்கள், தினகரனுக்கு ஆதரவாக மாறி எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் என மாறும் போது எடப்பாடி அரசு கவிழும் சூழ்நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்