கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக அந்த பகுதி மக்களை சந்தித்து பேசிய நடிகர் கருணாஸ் செய்தியாளர்களிடம் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.
நடிகர் கருணாஸ் திருவாடணை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ஜெயலலிதா இறந்த பின்னர் கூவத்தூர் விடுதியில் சசிகலா அணியினருடன் கருணாஸ் இருந்ததால் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவியது. அதன் பின்னர் தொகுதிக்கு சென்ற அவருக்கும் மக்கள் மத்தியிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கருணாஸுக்கு கூவத்தூர் விடுதியில் அதிக அளவு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரது பெயரும் அடிபட்டது. இதனையடுத்து இவர்கள் மூவரும் இணைந்து சட்ட மன்றத்திலும், வெளியிலும் செயல்பட ஆரம்பித்தனர். பேரறிவாளன் விவகாரத்திலும் இவர்கள் சேர்ந்து செயல்பட்டனர்.
அதே போல கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நீண்ட நாட்களாக போராடி வரும் மக்களை எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் சந்தித்து பேசினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சனைகள் வந்திருக்காது. மேலும் கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளதாக அதிரடியாக கருணாஸ் கூறியுள்ளார்.