மகளிர் இடஒதுக்கீடு என்பது இந்திய பெண்களுக்கான சலுகை அல்ல என்றும், அது பெண்களின் உரிமை என்றும் கனிமொழி எம்.பி. மக்களவையில் ஆவேசமாக பேசினார்.
இந்த மசோதா குறித்து அவர் மேலும் பேசியபோது, இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம்; ஆதரிக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக பாஜக இதனை அரசியலாக்குகிறது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போதெல்லாம் மசோதா நிறைவேறவில்லை.
முதல்முறையாக இந்த மசோதா மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, இந்த மசோதாவை ஆதரித்து நான் பேசினேன். ஆனால், மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை. 13 ஆண்டுகளாக நாம் இது குறித்து பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சட்டமாக கொண்டுவரப்படவில்லை.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. எனவே, மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கடமை பாஜகவுக்கு இருக்கிறது.
எனினும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது மனம் முழுமையாக மகிழ்ச்சி அடைந்தது. இந்த மசோதா பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை அல்ல, உரிமை என்று கனிமொழி எம்பி பேசினார்,.