நவம்பர் முதல் மக்களை சந்திக்கும் கமல்ஹாசன் - திட்டம் என்ன?

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (11:33 IST)
நடிகர் கமல்ஹாசன் வருகிற நவம்பர் மாதம் முதல் மாவட்ட ரீதியாக பொதுமக்களை சந்திக்க முடிவெடுத்திருக்கிறார் என அவரின் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர்.


 

 
அரசியலுக்கு விரைவில் வருவேன் என அறிவித்து விட்ட கமல்ஹாசன், நேற்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.
 
அதில், அவரது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி, தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க முடிவெடுத்திருப்பதாக நேற்றே செய்திகள் வெளியானது. இந்நிலையில், அவரை சந்தித்து பேசிய சில நிர்வாகிகள் மூலம் சில தகவல் வெளியே கசிந்துள்ளது. நிர்வாகிகளிடம் கமல் பேசியதாவது:
 
என் கடந்த 30 வருடங்களாக முறையாக வருமான வரி செலுத்துகிறேன்.  கருப்புப் பணம் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. அந்த தைரியத்தில்தான் தற்போது ஊழலை தட்டிக் கேட்கிறேன். 
 
தமிழ்நாட்டை பாதுகாப்பதோடு, நமக்கு தேசியமும் முக்கியம். நாம் பேசுவது டெல்லியில் எதிரொலிக்க வேண்டும்.  அதே நேரம், திராவிடத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. தமிழ்நாட்டிற்கு திராவிடக் கொள்கைகள்தான் அவசியம். 
 
முதலமைச்சர் பதவிக்க ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. நீங்களும் எம்.பி., அமைச்சர், கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு ஆசைப்படாதீர்கள். மக்களுக்கு நல்ல அரசியலை கற்றுக் கொடுப்போம். எனக்கு பணம் முக்கியம் இல்லை. அதை நான் சினிமாவிலேயே சம்பாதித்து விடுவேன். வருகிற நவம்பர் 7ம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன். அதன் பின் மாவட்ட வாரியாக மக்களை சந்திக்க வருகிறேன். குறிப்பாக மாணவர்கள் சந்திக்க ஆசைப்படுகிறேன். 
 
தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது. நமது நற்பணி மன்றம் மூலம் அனைவருக்கும் நில வேம்பு குடிநீரை இலவசமாக கொடுங்கள். 
 
ஒரு மகத்தான மாற்றத்தை ஆரோக்கியமான முறையில் நிகழ்த்தப் போகிறேம் என்கிற நம்பிக்கையோடு என் பின்னால் வாருங்கள்” என கமல் பேசினாராம்.
 
அவரின் பேச்சு அவரை சந்தித்த நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவர்களும் களப் பணிகளுக்கு தயாராகி விட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்