20 வருடங்களுக்கு முன்பே கீழடி ரகசியங்களை பேசிய கமல்? – வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (14:15 IST)
கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை தொடர்ந்து உலகமே தமிழ்நாட்டை திரும்பி பார்க்கும் நிலையில் இதுகுறித்து 20 வருடங்களுக்கு முன்பே கமல் படம் ஒன்றில் பேசியிருப்பதாக வீடியோ வெளியாகியுள்ளது.

உலகத்தின் பண்டைய நாகரீகங்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவிலும் பல இடங்களில் பழமையான நாகரீகங்கள் கண்டறியப்பட்டிருந்தாலும், அவற்றில் முக்கியமானது தமிழகத்தை சேர்ந்த கீழடி அகழ்வாராய்ச்சி. இந்த ஆராய்ச்சியின் மூலம் சுமார் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழகப் பகுதியில் வாழ்ந்த மக்கள் நாகரீகம் பெற்று இருந்ததை அறிய முடிகிறது. அந்த காலத்திலேயே மக்கள் எழுத, படிக்க அறிந்திருந்ததையும் தொல்பொருள் சான்றுகள் விளக்குகின்றன.

மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள் என பல்வேறு பொருட்கள் கிடைத்த கீழடியில் சாதி, மத அடையாளங்களோ, கடவுள் சிலைகளோ கிடைக்கவில்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதை நடிகர் கமல்ஹாசன் தனது “ஹே ராம்” படத்தில் முன்னரே குறிப்பிட்டுள்ளதாக படத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஹே ராம். பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த படம் கமலின் முக்கியமான படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. அந்த படத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளராக கமல் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் கமலிடம் ஷாரூக் கான் “இந்த நாகரீகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் தோன்றியது. மக்களாட்சியை முன்வைத்த நாகரீகம். குழந்தைகள் விளையாட பொம்மை செய்த நாகரீகம். நம்மளை போல் பெரியவர்கள் விளையாட ஆளுக்கொரு சாமி வேண்டும் என நினைத்த நாகரீகம் அல்ல” என்று சொல்வார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கீழடியில் கடவுளர் குறித்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதோடு அது சிந்து சமவெளி நாகரிகத்தோடு பல வகைகளில் ஒத்து போகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே சிந்து சமவெளி குறித்த கமல் படத்தில் வரும் வசனம், தற்போதைய கீழடி ஆராய்ச்சியிலும் ஒத்து போகிறது.

2004ல் சுனாமி ஏற்படும் முன்னரே தனது “அன்பே சிவம்” படத்தில் அதுகுறித்த ஒரு வசனம் வைத்திருப்பார் கமல். ஈபோலா வைரஸ் குறித்துதான் கமல் தசாவதாரத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று சொல்பவர்களும் உண்டு. விஸ்வரூபம் படத்தில் புறாக்கள் காலில் சீஸியம் குண்டுகளை கட்டி அனுப்புவதாக காட்சி வைத்திருப்பார். சில மாதங்கள் முன்பு உண்மையாகவே காபூலை தாக்க ஆப்கன் தீவிரவாதிகள் புறாக்கள் காலில் குண்டுகளை கட்டி அனுப்பியிருந்தனர்.

தொடர்ந்து இதுபோல எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்னரே கமல் தனது படங்களில் சொல்லி வருவதால் பலர் அவர் ஒரு இலுமினாட்டி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கீழடி குறித்த அவரது வீடியோ வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்