தமிழக அமைச்சர்கள் உடன் மல்லுக்கட்டி அரசை விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களை விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் அரசியல் குறித்து தான் அதிகமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக நடிகர் கமல் தமிழக அரசின் ஊழல்கள் குறித்து அதிகமாக பேசியும், டுவிட்டரில் பதிவிட்டும் வருகிறார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தும் கமலை விமர்சித்தும் வருகின்றனர். ஆனால் கமல் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
இதனால் நடிகர் ரஜினிகாந்தை முந்திக்கொண்டு நடிகர் கமல் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் கமல் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கும் அமைச்சர்கள் கமலை விமர்சிக்க அவரது ரசிகர்கள் கொந்தளித்து அமைச்சர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தானர்.
இதற்கு நடிகர் கமல் தனது டுவிட்டரில் தரம்தாழாதீர். வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவர்களுக்கு பதிலளிக்க நானே போதும் என கூறியிருந்தார்.
இதனையடுத்து நாடு காக்கும் நற்பணிக்கு நீ தேவை என கமல் கூறியதை அடுத்து தனது ரசிகர்களை சந்தித்து அலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி அரசியல் குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.