திமுக தலைவராக 50வது ஆண்டில் கலைஞர்.....

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (10:50 IST)
திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்று இன்றோடு 50வது வருடங்கள் முடிவடைந்துள்ளது.

 
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.  
 
கடந்த 18ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நேரத்தில் நேற்று இரவு மருத்துவர்களும், செவிலியர்களும் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
எப்போதும் இல்லாமல், ஓ.பி.எஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கோபாலபுரம் சென்று அவரின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்து வந்துள்ளனர். அவரின் உடல் நிலை பற்றி திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அச்சம் நிலவி வருகிறது.
 
ஆனாலும், அவர் நன்றாக இருக்கிறார் என்கிற செய்தி வெளியாகி திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர்கள் தங்கள் மகிழ்ச்சிகளையும், கலைஞர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

 
சிறு வயது முதல் தமிழ் ஆர்வம் கொண்டு அதில் சிறந்து விளங்கிய கருணாநிதி பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தவர். பாசத்தோடு ‘தம்பி’ என அண்ணா அவரை அழைக்கும் உரிமை பெற்றவர். எனக்கு பின் என் தம்பிதான் திமுகவை வழிநடத்துவான் என வெளிப்படையாக பொதுமேடைகளில் அண்ணா பேசும் அளவுக்கும் அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியவர் கருணாநிதி.
 
திமுகவின் முதல் தலைவராக 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50ம் ஆண்டில் அவர் இன்று அடியெடுத்து வைத்து தலைவர் பொறுப்பில் பொன்விழா காணுகிறார்...
 
நல்ல உடல் நலத்தோடு இந்த நாளை அவர் சந்திப்பது அவரின் தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்