திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், முதலமைச்சர் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
போதை பொருள் தொடர்புடைய 2138 வழக்குகளில் 148 பேர் தான் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற வழக்குகளின் நிலை என்னவானது என்று தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தினந்தோறும் அரங்கேறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இளைஞர்களும், மாணவர்களும் சீரழிந்து வருகிறார்கள் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.