இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக இளைஞர்களை, மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க மக்கள் எழுச்சிப் போரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கியதாக தெரிவித்துள்ளார்.
போதை கலாச்சார சீரழிவிற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், 'டிரக் மாஃபியாக்களாக' வலம் வரும் திமுக நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி 25-ல் சேலம் பொதுக்கூட்டத்தில் தனது கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்ததை ஜெயக்குமார் சுட்டிக்காட்டி உள்ளார்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டு ஒருவார காலம் ஆன நிலையில், எந்தவிதமான தெளிவான விளக்கத்தை, ஆளும் திமுக அரசின் சார்பாகவோ, கட்சியின் சார்பாகவோ தெரிவிக்காத நிலையில், இந்த மக்கள் விரோத அரசுக்கு பாடம் புகட்ட நேற்று தமிழகம் முழுவதும் 'போதை பொருட்கள் கலாச்சார சீரழிவை' எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை அதிமுகவினர் நடத்திக் காட்டினார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆர்பாட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்க முடியாமல், ஆர்.எஸ். பாரதி மூலம் பேட்டி அளிக்க வைத்துள்ளார் என்றும் முதலமைச்சரின் இந்த செயலை கண்டிப்பதாகவும், முழுமையான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.