அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூரை சேர்ந்த இஞ்சினீயரிங் பட்டதாரி ரகுபதி. இவருடைய நண்பர் சந்தோஷ். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். சந்தோஷின் தம்பி முறையான தேவ பிரசாத் என்பவர் தமிழ்நாடு காவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.
ரகுபதி தேர்வுகளில் கைத்தேர்ந்தவர் என்பதால் சந்தோஷ் அவரிடம் பேசியுள்ளார். அவரும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு ஒன்றரை லட்சம் பணம் கேட்டுள்ளார். அதில் 1 லட்சத்தை முன் பணமாகவும் பெற்றுள்ளார்.
தேர்வு நடைபெற்ற அன்று தேர்வறையில் இருந்த தேர்வு அதிகாரி ஹால் டிக்கெட்டில் இருக்கும் புகைப்படத்தையும், ரகுபதியையும் பார்த்தபோது உருவ ஒற்றுமை இல்லாததை கண்டு சந்தேகம் எழுந்துள்ளது. தேர்வு எழுதும் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தவர், பிற அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்கள் ரகுபதியை தனியாக அழைத்து விசாரித்தபோது ஆள்மாறாட்டம் செய்ததையும், அதற்கு கையூட்டாக பணம் பெற்றதையும் ரகுபதி ஒத்துக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரகுபதி, சந்தோஷ் மற்றும் தேவ பிரசாத் ஆகியோரை கைது செய்துள்ளனர்.