பயங்கரவாத தொடர்புடைய மூன்று பேர் கோவையில் கைது? அதிகரிக்கும் பதட்ட நிலை

சனி, 24 ஆகஸ்ட் 2019 (19:40 IST)
கோயம்புத்தூரில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறப்படும் நிலையில், பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை தமிழக போலீஸுக்கு உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது. அதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனும், அவனோடு 5 இலங்கையை சேர்ந்த நபர்களும் கள்ள படகு மூலமாக தமிழ்நாட்டில் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் தற்போது கோயம்புத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதனால் உஷாரடைந்த தமிழக காவல் துறை மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், சந்தைகள் மற்றும் கோவில்கள் ஆகிய பகுதிகளில் பாதுகப்பை பலப்படுத்தி உள்ளனர். மேலும் சந்தேகத்திற்கிடமான ஆட்கள் யாராவது தென்பட்டால் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோயம்புத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்