தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் வகையிலும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் வகை செய்யும் கல்வி தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த தொலைக்காட்சியில் மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி மட்டுமல்லாது, வேலைவாய்ப்பு, திறன் வளர்த்தல், சுயத்தொழில் பயிற்சி ஆகியவை குறித்த வீடியோக்களும் ஒளிபரப்ப இருக்கிறார்கள். அரசு கேபிள் இணைப்பில் சேனல் எண் 200ல் இந்த கல்வி டிவி ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் செயலி மூலமாக போன்களிலும் இந்த டிவியை பார்க்க முடியும்.
ஒளிபரப்பை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”அதிமுக அரசு தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்துள்ளது. அந்த வகையில் இந்த கல்வி டிவி மாணவர்களுக்கு கல்வி பயில மிகவும் உதவியாக இருக்கும். வீட்டில் டிவி பார்க்கும் மாணவர்கள் சரியாக படிப்பதில்லை என கூறப்படும் நிலை இனி மாறும்” என தெரிவித்துள்ளார்.