மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பசு தலையை வீசியதாக இஸ்லாமியர்களை கொடுமைப்படுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை சிலர் வீசி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இஸ்லாமியர்கள் நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி அவர்களை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்ட நிலையில் போலீஸார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கவும், 6 காவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.