முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Mahendran

புதன், 8 ஜனவரி 2025 (17:25 IST)
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர், முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நிலையில் அந்த பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதிக்குச் சேர்ந்த தமிழரசன், நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளராக இருக்கிறார். இன்ஜினியரிங் படித்த இவர், 2010 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கிருந்து முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து சமூக வலைதளங்களில் அநாகரிகமாக விமர்சனங்கள் செய்துள்ளார்.

குறிப்பாக, முதலமைச்சர் மகள் குறித்து முகநூலில் தரக்குறைவாக விமர்சனம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழரசன், பக்ரைன் நாட்டில் இருந்து சென்னைக்கு  தன்னுடைய வீட்டிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. மும்பையில் அவர் வந்து இறங்கியவுடன், தமிழ்நாடு போலீசார் அவரைக் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி, தமிழரசனை 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், மயிலாடுதுறை கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்