சர்வதேச மற்றும் தேசிய அளவில் சாதித்த பிற வீரர் - வீராங்கனையருக்கும் உயரிய ஊக்கத்தொகையை வழங்கினோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று நேரு விளையாட்டரங்கில், தேசிய அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 52 மாற்றுத்திறனாளி வீரர் - வீராங்கனையருக்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதுபற்றி அமைச்சர் உதயநிதி தன் சமூக வலைதள பக்கத்தில்,
மாற்றுத்திறனாளி என்னும் உரிமை சொல்லை தந்து அவர்களுக்கு சமூக அங்கிகாரமும், சட்ட உரிமையும் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் அவர்கள் வழியில், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்க நம்முடைய கழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 52 மாற்றுத்திறனாளி வீரர் - வீராங்கனையருக்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகையினை நேரு விளையாட்டரங்கில் இன்று வழங்கி, வாழ்த்தினோம். சர்வதேச மற்றும் தேசிய அளவில் சாதித்த பிற வீரர் - வீராங்கனையருக்கும் உயரிய ஊக்கத்தொகையை வழங்கினோம்.
இந்த நிகழ்வில், விளையாட்டு வீரர்களின் உடல் திறனையும், தகுதி திறனையும் மேம்படுத்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் சாதனைகள் படைக்க நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.