கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு : ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - நீர் நிரம்பி செல்லும் நொய்யல் ஆறு!

J.Durai
வியாழன், 18 ஜூலை 2024 (13:44 IST)
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப் போது பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியதால் தொடர் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக நேற்று சிறுவாணி அடிவார பகுதிகளில்  95 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. 
 
கடந்த 15 நாட்களுக்கு மேலாக கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்பொழுது நொய்யல் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் அதனை சுற்றி உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 
மேலும் நேற்று பெய்த கன மழையால் அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, கோவை மாவட்ட வனத் துறை தடை விதித்து உள்ளது.
 
வெள்ளப்பெருக்கு சீரான பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்