சிறுவாணி அணை நீர்மட்டம் 38.67 அடியாக உயர்வு - அணை இந்த ஆண்டு நிரம்ப வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல்!

J.Durai

புதன், 17 ஜூலை 2024 (18:47 IST)
கேரளா மாநிலம், மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 
 
50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். ஆனால் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு குறைந்தது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கு இடையே அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 38.67 அடியை தாண்டி உள்ளது. 
 
நேற்று நிலவரப்படி அணையில் 7 சென்டி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். 
 
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது......
 
அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது அணையில் இருந்து 5 கோடி 70 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது. 
 
அதில் 5 கோடி லிட்டர் குடிநீர் கோவை மாநகர பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டது.
 
தொடர்ந்து அணை பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்