வங்க கடலில் உருவான புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், நாளை தான் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் நேற்று வலுப்பெற்ற புயல், இன்று மதியம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புயல் கரையை கடக்க தாமதம் ஆகி வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஃபென்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் அதற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.