சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களில் இரவு நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் காரணத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதை எடுத்து தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது