திமுக நினைப்பது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி அல்ல என்று பாஜகவின் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மது ஒழிப்பு மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்துவது திமுகவுக்கு நெருடலை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனா சினிமா நடிகர் எல்லாம் துணை முதல்வராகும்போது திருமாவளவன் துணை முதல்வராக கூடாது என்ற கேள்வி எழுப்பியது திமுக கூட்டணிகள் சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க முடியாது என்று திருமாவளவன் சொன்னாலும் கூட்டணியில் நிச்சயம் பிளவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், இது குறித்த கேள்விக்கு பாஜக எச் ராஜா பதிலளித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்த் உடன் இணைந்து மக்கள் நல கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தபோது அந்த கூட்டணிக்கு வெறும் ஆறு சதவீத வாக்குகள் தான் கிடைத்தது. எனவே, திமுக நினைப்பது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை என்று தெரிவித்தார். அவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.