ஹெச் ராஜா vs கார்த்திக் சிதம்பரம் – ஸ்டார் தொகுதியாகுமா சிவகங்கை ?

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (10:01 IST)
சிவகங்கை தொகுதியில் ஹெச் ராஜாவும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் நேரத்தில் சில தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக மாறுவது வழக்கம். ஒருக் கட்சியின் பிரபலமானத் தலைவர் போட்டியிடும் தொகுதி அல்லது இரண்டு எதிர்க்கட்சிகளில் மிகப் பிரபலமான வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடும்  தொகுதி ஆகியவைத் தேர்தல் களத்தில் மிகவும் கவனம் பெறும். இந்தத் தேர்தலில் ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் விருதுநகர் தொகுதிகள் ஏற்கனவே இந்த பட்டியலில் இணைந்துள்ளன.

அதுபோல சிவகங்கைத் தொகுதியும் இம்முறை ஸ்டார் அந்தஸ்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் பிரபலமான வேட்பாளர்கள் இருவர் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிவகங்கைத் தொகுதி முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொந்த தொகுதி. சிதம்பரம் பல முறை அங்குப் போட்டொயிட்டு வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் அங்கு அவரது சமுதாய வாக்குகளும் அதிகம். அதனால் இம்முறை அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் அங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல பாஜக வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில் சிவகங்கைத் தொகுதியும் ஒன்று எனக் கூறப்படுகிறது, அங்கு பாஜக வின் தேசியச் செயலாளர் ஹெச் ராஜா நிற்பார் எனப் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. ராஜாவுக்கு சிவகங்கைத் தொகுதி சொந்தத் தொகுதி. ஒரே தொகுதியில் இரண்டு ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இப்போது சிவகங்கைத் தொகுதிக்கும் ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்