அதிமுக கூட்டணியில் பாஜக-பாமக-தேமுதிக ஆகியக் கட்சிகள் இணைவது நேற்று வரையில் வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் இன்று காலை பாமக வோடு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாமக. அந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மாநிலங்களவைத் தேர்தலில் 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதையடுத்து சில மணி நேரங்களில் பாஜக வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து 5 தொகுதிகளைக் கொடுத்து டீலை முடித்தது.
ஆரம்பத்தில் 10 சீட்டுகள் கேட்ட பாஜக அதிமுக அரசு அளித்த தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தவுடன் 5 தொகுதிகளுக்கு ஓகே சொல்லியதாகத் தெரிகிறது. இந்த 5 தொகுதிகள் என்னென்ன என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக வின் இந்த 5 தொகுதிகளில் பாஜக சார்பில் நிற்கவைக்கப்பட இருக்கும் வேட்பாளர்களில் பாஜக வின் தேசிய செயலாளரான ஹெச் ராஜாவும் ஒருவராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கூட்டணி குறித்து ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்தில் மத்தியில் நிலையான ஆட்சியையும் மோடிஜி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வலிமையான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவைப் பொருத்தவரை 40 தொகுதிகளிலும் மோடிஜியே வேட்டாளர் எனக்கருதி கடுமையாக உழைத்திடுவோம். தீயசக்தி திமுகவிற்கு பாடம் புகட்டும் நேரமாவது. ‘ எனத் தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.