நெய்தீபம் ஏற்றிய போது சேலையில் தீ..! கோவிலில் நடந்த விபரீதம்..!!

Senthil Velan
புதன், 28 பிப்ரவரி 2024 (16:33 IST)
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த போது, பெண் ஒருவரின் சேலையில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 
 
பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அப்போது சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிரேமலதா (61) என்பவர் நெய்தீபம் ஏற்றியதில் எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. 
 
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ALSO READ: 'GO BACK MODI' - பழவேற்காடு ஏரியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்..!!
 
இந்த சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவாபுரி முருகன் கோவிலில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த போது சேலையில் தீப்பற்றி பெண் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்