சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மாமியாரின் கழுத்தை நெறித்து மருமகன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள பாப்பான்காடு என்ற பகுதியில் வசித்து வந்தவர் பேபி. இவரது மகள் தீபா. இவருக்கும் வேலூரில் வசித்து வந்த கணபதி என்பவருக்கும் சில வருடங்களுக்கும் முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணபதிக்கும் , தீபாவிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கணவனை விட்டு பிரிந்த தீபா, தன் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு ஒரு நூற்பாலையில் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தீபாவை தன்னுடன் வந்து வாழும்படி கணபதி, பேபியின் வீட்டுக்குச் சென்று கேட்டுள்ளார். அதற்கு பேபி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில், கோபமடைந்த கணபதி மாமியாரை கொல்ல திட்டமிட்டுள்ளார். பின்னர், தீபா வேலைக்குச் சென்றிருந்த சமயம்,வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பேபியின் கழுத்தை நெறித்துக் கொடூரமாக கொன்று விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேபியில் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த சங்ககிரி போலீஸார் கணபதியை தேடி வருகின்றனர்.