ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில்”. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் விஜய் பேசிய அரசியல் கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் பிகில் திரைப்படம் குறித்து இறைச்சி வியாபாரிகள் புதியதொரு புகாரை அளித்துள்ளனர்.
பிகில் படத்துக்காக இளமையான விஜய் கால்பந்துடன் பின்னால் நிற்பது போலவும், வயதான விஜய் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும் போஸ்டர் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் வயதான விஜய் கறிவெட்டும் கட்டை மீது செருப்பு அணிந்தபடி காலை வைத்திருப்பார். அருகில் ஒரு அரிவாள் சொருகியிருக்கும்.
அதை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த இறைச்சி வியாபாரிகள் ”கறிவெட்டும் கட்டை (முட்டி) எங்களுக்கு கடவுள் போன்றது. நாள்தோறும் கறி வெட்டும் முன்னர் அந்த கட்டையை தொட்டு கும்பிட்டுதான் தொழிலை தொடங்குவோம். அப்படிப்பட்ட எங்கள் நம்பிக்கைகளை செருப்பால் அடிக்கும்படி அதில் செருப்பு காலை வைத்து போஸ் கொடுத்திருக்கிறார் விஜய். படத்தில் இப்படியான காட்சி இடம்பெறுமானால் கண்டிப்பாக நாங்கள் போராடுவோம்” என கூறியுள்ளனர்.