'பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்களை தாக்குவது கண்டனத்துக்குரியது’’ -நடிகர் விஜயகாந்த்

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (16:10 IST)
‘’தமிழகத்தில் பள்ளிக்குள்ளேயே நுழைந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது’’ என்று நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கீழ நம்பிபுரத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பாரத். இவர்  கடந்த 21 ஆம் தேதி காலை பள்ளியில் பணியாற்றி வந்தபோது, அப்பள்ளியில், 2 ஆம் வகுப்பு படிக்கும், மாணவரின்  பெற்றோர், மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் தங்கள் மகனை  ஏன் அடித்தீர்கள் என்று கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மாணவனின் தந்தை, தலைமையாசிரியர் குருவம்மாளை தாக்கியதுடன், ஆசிரியர் பாரத் என்பவரையும் ஓட ஓட விரட்டி அடித்து தாக்குதல்  நடத்தியதுடன், அங்கிருந்த நாற்காலிகளையும் உடைத்தனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாணவனின் தாய்,தந்தை ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல், பள்ளியில் பள்ளிகளில் ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இதுகுறித்து, இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  ‘’தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி குழந்தையை தாக்கியதாக கூறி கடந்த 21ஆம் தேதி குழந்தையின் குடும்பத்தினர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்கள் மீது வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது ஆசிரியர் ஒருவரை காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குள்ளேயே நுழைந்து ஆசிரியர்களை தாக்குவது போன்ற வீடியோக்களை காணும்போது தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதை உணர முடிகிறது. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை ஆசிரிய பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதேசமயம் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பள்ளிக்குள்ளேயே நுழைந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்