ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதன்முதலாக சுயேட்சை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் 2023ஆம் ஆண்டு காலமானார்.
அதை தொடர்ந்து, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அவர் வெற்றி பெற்றார். ஆனால் அவர் கடந்த டிசம்பர் மாதம் காலமான நிலையில், தற்போது மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு வேட்பாளர் தாக்கல் தொடங்கிய நிலையில் பத்மராஜன் என்ற சுயேட்சை வேட்பாளர் மட்டும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இன்று மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், ஜனவரி 17ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்றும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில், திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்றும், அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை களம் இறக்குவதாக எதிர்பார்க்கப்படுகிறது.