சென்னையில் ஒருபக்கம் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் வருமான வரித்துரையினர்களின் சோதனையில் இருந்தபோது, தூத்துக்குடியில் இன்னொரு பக்கம் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இரட்டை இலைச் சின்னமும், கட்சியும் எங்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் சதி என்பது அனைவருக்குமே தெரியும். மூச்சுப்பேச்சு இல்லாமல் போன மனிதரைப் போல, தமிழக அரசு செயல்பாடில்லாமல் முடங்கிப் போய்விட்டது. எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா என்ற பெயரில் அமைச்சர்கள் நாற்காலிகளுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எங்கள் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 17 பேருடன், இன்னும் 20 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் இணைய முடிவெடுத்துள்ள தகவல் தெரிந்துதான் எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்.ஸும் எனக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு என்ன செய்கிறோம் என்பதை செய்யத் தெரியாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வருமான வரித்துறை சோதனை ஏற்படுத்தினால் நான் பயந்துவிடுவதாக நினைக்கிறார்கள். இப்போது பயந்து போய் இருபது நான் அல்ல... ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என நினைத்து தினம் தினம் அவர்கள்தான் பயந்து கொண்டிருக்கிறார்கள்.
புதுச்சேரி, டெல்லி போன்ற யூனியன் பிரதேச மாநிலங்களில்தான் ஆளுநர் அரசு அலுவலகங்களையும், பணிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு. ஆனால், தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் ஆளுநருக்கு இது போன்ற அதிகாரம் இல்லை. ஆளுநரின் கோவை விசிட் குறித்து எல்லா கட்சி தலைவர்களுமே தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அமைச்சரவையில் உள்ள ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் அவர்களது பணியைச் சிறப்பாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எங்களுக்கும் விசுவாசமாக இருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடியை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னால்தான் தெரியும் எங்கள் அணியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்கள் என்று. பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லும் நாள் அன்று ஆட்சியும் நிச்சயமாகக் கவிழும். அந்தநாள் விரைவில் வரும். எடப்பாடி அணியினர் வீட்டிற்குச் செல்லும் காலமும் நெருங்கிவிட்டது. வரும் தைப் பொங்கலுக்குள் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வரும்." இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்