8 வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (07:39 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொதுமக்களை குறிப்பாக சிறுவர் சிறுமிகளை தெரு நாய் கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது என்பதும் இதனால் பலர் காயம் அடைந்து சிலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னையில் ஏற்கனவே சிறுவர் சிறுமிகளை நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சம்பவங்கள் நடத்த நிலையில் தற்போது தண்டையார்பேட்டையில் எட்டு வயது சிறுவனை தெரு நாய் கடித்த சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சிறுவன் தனது வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றபோது திடீரென அங்கிருந்த தெரு நாய் சிறுவனை விரட்டி விரட்டி கடித்தது. இதனை அடுத்து அங்கு இருந்தவர்கள் சிறுவனை காப்பாற்றி பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் உடனடியாக அந்த சிறுவன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த சிறுவனுக்கு தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனை கடித்தது மட்டுமின்றி சிறுவனை காப்பாற்ற சென்ற சிலரையும் அந்த வெறி நாய் கடித்ததாகவும், இதனை அடுத்து மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் வெறிநாயை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாய்கள் மனிதர்களை கடித்தால் அந்த நாயை வளர்ப்பவர்கள் தான் பொறுப்பு என்று சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது என்பதும் நாய் வளர்ப்பவர்கள் உடனடியாக லைசன்ஸ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுத்தும் அவ்வப்போது தெருநாய்கள் சிறுவர் சிறுமிகளை கடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்