’ஆங்கிலத்தில் பேசியது புரியவில்லை’ - கருணாஸின் கருத்துக்கு திமுக எதிர்ப்பு

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (14:13 IST)
சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசியது தொடர்பாக கருணாஸ் தெரிவித்த கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

 
நேற்று தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, திருவாடானை தொகுதி எம்எல்ஏவான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேசுகையில், ”சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து, மதுரை மத்தியம் தொகுதி திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
 
அவரது ஆங்கில உரையை பார்த்து நானே வியந்தேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியது யாருக்கும் புரியவில்லை. அது குறித்து அவரது கட்சி தோழர்கள், ஆங்கிலத்தில் பேசினால் அமைச்சர்கள் யாரும் பதில் அளிப்பதில்லை” என்றார்.
 
அப்போது, திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”உறுப்பினர் அவராக கற்பனை செய்து கொண்டு பேசுகிறார். அவர் கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.
 
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், “உறுப்பினர் கருணாஸ் அவைக்கு புதியவர். அவருக்கு அவை மரபு தெரியாது. இந்த மன்றத்தில் நீங்கள் (சபாநாயகர்) அனுமதித்தால் தெலுங்கில் கூட பேசலாம். எனவே, அவர் கூறிய கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்குங்கள்.
 
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ப.தனபால், ”கருணாஸ் பேசியது அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தை அல்ல. இதில், எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருவருடைய எதிர்ப்பும் பதிவு செய்யப்படும்” என்றார்.
 
தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், ”உறுப்பினர் கருணாஸ் எங்கள் கட்சி உறுப்பினரின் பேச்சை கொச்சை படுத்துகிறார். இதே அவையில் ஓசூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் தெலுங்கில் பேசியுள்ளார். பேரவை விதியில், தமிழ், ஆங்கிலம், இரு மொழியில் பேசலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது” என்றார்.
 
பின்னர் திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பதிலளிக்கையில், ”எனக்கும் தமிழ் தெரியும். தமிழில் உள்ள நுட்பமான வார்த்தைகள் எனக்கு தெரியாது. நான் பொருளாதாரம் படித்தபோது ஆங்கிலத்தில் படித்தேன். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசினேன். கருணாஸுடன் விவாதம் செய்ய தயாராக உள்ளேன்” என்றார்.
அடுத்த கட்டுரையில்