அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் நேற்று இணைந்தது. இதனையடுத்து ஓபிஎஸ் துணை முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவு எம்எல்ஏ போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நேற்று இரவு 8 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அரை மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் தினகரன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த இணைப்பு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்திக்க வருகின்றனர். நேற்று 18 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று விளாத்திக்குளம் எம்எல்ஏ உமா மகேஷ்வரி தனது ஆதரவை தெரிவித்தார்.
ஏற்கனவே தினகரன் அணியில் ஆண்டிபட்டி தொகுதி தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி கதிர்காமு, கம்பம் தொகுதி ஜக்கையன், நிலக்கோட்டை தொகுதி தங்கதுரை, பரமக்குடி தொகுதி முத்தையா, சாத்தூர் தொகுதி சுப்ரமணியன், குடியாத்தம் தொகுதி ஜெயந்தி, மானாமதுரை தொகுதி மாரியப்பன் கென்னடி, பாப்பிரெட்டிபட்டி தொகுதி பழனியப்பன், அரவக்குறிச்சி தொகுதி செந்தில்பாலாஜி, பெரம்பூர் தொகுதி வெற்றிவேல், சோளிங்கர் தொகுதி பார்த்திபன், திருப்போரூர் தொகுதி கோதண்டபாணி, பூந்தமல்லி தொகுதி ஏழுமலை, தஞ்சை தொகுதி ரெங்கசாமி, ஆம்பூர் தொகுதி பாலசுப்பிரமணியன். அரூர் தொகுதி முருகன், ஓட்டப்பிடாரம் தொகுதி சுந்தராஜ் ஆகியோர் உள்ளனர்.
இவர் 19 பேரும் இன்று ஆளுநர் வித்தியாசாகார் ராவை சந்தித்து எடப்பாடி அணிக்கு தாங்கள் அளித்து இருந்த ஆதரவை வாபஸ் வாங்க இருப்பதற்கான கடிதத்தை அளிக்க உள்ளனர். மேலும் சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தங்கள் பெரும்பான்மையை நிரூப்பிக்க உத்தரவிட ஆளுநரை வலியுறுத்த உள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்த பின்னர் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் ஓபிஎஸ் ஆதரவு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்க உள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும் நிலையில் உள்ளன.