அத்திவரதரை தரிசிக்க பத்து மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்: திணறிய போலீஸார்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (09:17 IST)
அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் பக்தர்கள் குவிந்ததால் பத்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஜூலை 31 ஆம் தேதி வரை சயனகோலத்தில் காட்சித் தந்த அத்திவரதர், ஆகஸ்து 1 ஆம் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சித் தந்து வருகிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சித் தரும் அத்திவரதர், வருகிற 17 ஆம் தேதி மீண்டும் குளத்திற்குள் செல்கிறார். இதனால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் நேற்று பெருமாளுக்கு உகந்த ஏகாதசி நாள் என்பதால், பல லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்தனர். இரவு 7 மணிவரை 2 ½ லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்ததால் போலீஸார் கூட்டத்தை கட்டுபடுத்த திணறினர். இந்த கூட்டத்தால் பக்தர்கள் நேற்று 10 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்தினால், நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்