கேரள நிலச்சரிவில் பலியான தமிழக தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (19:32 IST)
சமீபத்தில் கேரளாவில் உள்ள ராஜமாலா என்ற பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் குடியிருந்த குடியிருப்பில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழக தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த தமிழக குடும்ப தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களுக்கு நிவாரண உதவியும் அறிவிப்புச் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது
 
கேரளா மாநிலம்‌, இடுக்கி மாவட்டம்‌, மூணாறு பகுதியில்‌ சமீபத்தில்‌ பெய்த பலத்த மழை காரணமாக 6.8.2020 அன்று இராஜமலா பெட்டிமுடி டிவிசன்‌, நயமக்காடு தேயிலை தோட்டப்‌ பகுதியில்‌ இருந்த தொழிலாளர்கள்‌ குடியிருப்புகளில்‌ நிலச்சரிவு ஏற்பட்டு, அதில்‌ தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள்‌ பலர்‌ சிக்கி உயிரிழந்துள்ளனர்‌ என்ற செய்தியை அறிந்து நான்‌ மிகுந்த வேதனை அடைந்தேன்‌.
 
உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொண்டு, நிலச்சரிவில்‌ சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய்‌ மாண்புமிகு கேரள முதலமைச்சர்‌ அவர்களை நான்‌ 77.8.2020 அன்று தொலைபேசி வாயிலாக கேட்டுக்‌ கொண்டேன்‌.
 
இந்த நிலச்சரிவில்‌ சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள்‌ தமிழ்நாட்டில்‌ பூர்வீகமாக கொண்டு பல ஆண்டுகளாக அங்கே தங்கி பணிபுரிந்து வருகிறவர்கள்‌ என்ற தகவல்‌ கிடைக்கப்பெற்றவுடன்‌, உடனடியாக தலைமைச்‌ செயலாளர்‌ அவர்களை தொடர்பு கொண்டு, நிலச்சரிவில்‌ சிக்கிய தமிழ்நாட்டைச்‌ சேர்ந்தவர்களின்‌ விவரங்கள்‌ குறித்து முழுத்‌ தகவல்‌ பெறுமாறும்‌, அவர்களுக்குத்‌ தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும்‌ நான்‌ உத்தரவிட்டேன்‌.
 
எனது உத்தரவின்‌ பேரில்‌, தேனி மாவட்டத்தில்‌ இருந்து, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ தலைமையில்‌ ஒரு குழு 7.8.2020 அன்றே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து தேசிய மீட்புப்‌ பணி குழுவினருடன்‌ இணைந்து மீட்புப்‌ பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்‌.
 
இடிபாடுகளில்‌ சிக்கிய 12 தொழிலாளர்கள்‌ பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‌. நிலச்சரிவில்‌ சிக்கி காயமடைந்து மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும்‌ அனைவரும்‌ விரைவில்‌ பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்‌ என்று இறைவனிடம்‌ நான்‌ பிரார்த்திக்கிறேன்‌.
 
இந்த துயரச்‌ சம்பவத்தில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள உயிரிழந்தவர்‌ குடும்பத்தின்‌ நேரடி வாரிசுதாரர்களுக்கு இறந்த நபர்‌ ஒருவருக்கு தலா மூன்று லட்சம்‌ ரூபாயும்‌: பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான்‌ உத்தரவிட்டுள்ளேன்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்