பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு இரண்டு மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தீவிரமான தேசியவாதியாகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அக்டோபர் 30ம் தேதியில் பிறந்த முத்துராமலிங்க தேவர் தனது 55 வயதில் அதே அக்டோபர் 30ம் தேதி மறைந்தார். இதனால் அவரது குருபூஜையும், ஜெயந்தியும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் பல பொதுமக்களும், கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு இரண்டு மணிமண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேவர் நினைவிட முகப்பில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ.1.43 கோடியில் மணிமண்டபம் ஒன்றும், மிக முக்கிய பிரமுகர்கள் மட்டும் சென்று அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ.12.54 லட்சத்தில் மற்றொரு மணிமண்டபமும் கட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.