கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் பல ஆண்டுகளாக சாராய விற்பனை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அதை தடுக்காமல் மதுவிலக்கு பிரிவு என்ன செய்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் 67 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் காரணமாக கள்ளக்குறிச்சி எஸ்பி உள்ளிட்ட ஒன்பது காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரிக்க தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும், சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் கள்ளச்சாராய வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று வந்தது. இன்றைய விசாரணையில் கள்ளச்சாராயம் மரணத்தால் பதட்ட நிலை உருவானதால் 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் என தமிழக அரசு விளக்கம் அளித்தது.
அப்போது நீதிபதிகள், பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்காமல் மதுவிலக்கு பிரிவு என்ன செய்கிறது என்ற கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள், ஜனவரி 6ஆம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தனர்.