கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க தமிழக அரசு மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ விசாரிக்க தடை விதிக்க மறுத்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள சுகுணாபுரம் என்ற பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி நடத்தக்கூடாது என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை என்றும் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இந்த மனு விசாரணைக்கு வந்தது.
தமிழக போலீசாரின் விசாரணையில் எந்த தவறும் இல்லை என்றும் அரசு சார்பில் விளக்கமளித்தது. ஆனால், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.