யூட்யூப் பார்த்து செயின் பறிப்பு; போலீஸுக்கு அல்வா கொடுக்க முயன்ற இருவர் கைது!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (10:02 IST)
சென்னையில் யூட்யூப் பார்த்து போலீஸிடம் சிக்காமல் செயின் பறிப்பது எப்படி என பார்த்து குற்ற செயலில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ராதா என்பவரின் 4 பவுன் தங்க சங்கிலியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாங்காடு தனிப்படை போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 600 கேமராக்களை ஆய்வு செய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பல இடங்களில் சுற்றி திரிந்தது தெரிய வந்துள்ளது.

மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த அவர்கள் ஒவ்வொரு ஏரியாவுக்கு சென்றதும் பைக்கின் நம்பர் ப்ளேன், மற்றும் தங்களது உடைகளையும் மாற்றியுள்ளனர். இதற்காக போலீஸிடம் சிக்காமல் செயின் பறிப்பது எப்படி என்பது குறித்து அவர்கள் யூட்யூபில் பார்த்தது பின்னர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எவ்வளவோ டிமிக்கி கொடுக்க முயன்றும், போலீஸாரின் சாதுர்யமும், தொழில்நுட்பமும் அவர்களை சிக்க வைத்துள்ளது. குற்ற செயலில் ஈடுபட்ட விஜய் மற்றும் படகோட்டி தமிழனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்