பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக அளித்த புகாரில் ஷோபா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய இணையமைச்சர் ஷோபா முறையீடு செய்திருந்தார்.
இந்த முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, குண்டு வைத்த நபர் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தெரிந்திருக்கும் பட்சத்தில், பொறுப்பான குடிமகன் என்ற முறையில் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புபடுத்திப் பேசியதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், தனது கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் மத்திய இணையமைச்சர் ஷோபா கூறியிருந்தார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இணையமைச்சர் ஷோபா தனது கருத்துகளை திரும்பப்பெற்றாலும் அவர் மீது தொடரப்பட்ட வழக்கை திமுக வாபஸ் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.