சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், இரு நாட்களாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் இன்றைய கூட்டத்தையும் அதிமுக உறுப்பினர்கள்புறக்கணித்தனர்.
இந்நிலையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக எம்எல்ஏ ஜிகே மணி, 10.5 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாளாக கிடப்பில் உள்ளது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்தினால்தான் தமிழகத்திலும் நடத்த இயலும் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உங்கள் கூட்டணி கட்சியிடம் பேசுங்கள் என்று ஜி.கே மணிக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.