கால்டாக்சி டிரைவர் தற்கொலை எதிரொலி: வாகன ஓட்டுனர் சங்கம் அதிரடி முடிவு

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (07:48 IST)
சமீபத்தில் சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்ற கால்டாக்சி டிரைவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்து ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜேஷ் மட்டுமின்றி பல கால்டாக்சி டிரைவர்களை போலீசார் தரக்குறைவாக திட்டுவதாகவும் இதனால் டிரைவர்கல் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வாடகை வாகன ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூஸ் உள்ளிட்டோர் புகார் ஒன்றை அளித்தனர். இந்த புகாரில் ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போக்குவரத்து காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜூட் மேத்யூஸ் கூறியதாவது: போலீசாரால் கார் ஓட்டுனர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஓராண்டுக்குள் 3 கார் ஓட்டுனர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே காவல்துறையின் இந்த போக்கை கண்டித்து பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கார் ஒட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம்' என்று அறிவித்துள்ளார். எனவே வரும் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கால்டாக்சிகள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்