விஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை

ஞாயிறு, 20 ஜனவரி 2019 (10:27 IST)
கோவை கருமத்தம்பட்டியில் தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (வயது 38). இவர் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதமாக அமலி நகரில் வாடகை வீட்டில் மனைவி ஷோபனா (30), மகன் ரித்திக் மைக்கேல் (7), மகள் ரியா ஏஞ்சலின் (1) மற்றும் தாயார் புவனேஸ்வரி (65) ஆகியோருடன் வசித்து வந்தார். 
 
அந்தோணி ஆரோக்கியதாசுக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகு வலி இருந்து வந்தது. ஆனால் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
இது தொடர்பாக அந்தோணி ஆரோக்கியதாஸ் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு பல ஆண்டுகளாக முதுகுவலி இருந்துள்ளது என்றும், இதனால் மனம் வெறுப்படைந்து இந்த முடிவை தேடிக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 
 
இது உண்மையா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்