மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை.! தமிழக அரசு அதிரடி..!!

Senthil Velan
வியாழன், 11 ஜூலை 2024 (17:06 IST)
பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், கடந்தாண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. 
 
இந்த உரிமை தொகைக்காக மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமை தொகை செலுத்தப்பட்டது.  மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. உரிமை தொகை பெற தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பலரும் விமர்சனங்களை எழுப்பினர். இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக 2023 நவம்பர் மாதம் 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. 
 
தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மேலும் 11.85 லட்சம் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்திருந்துள்ளனர். இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்தன. இது தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ALSO READ: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.! 3 ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு.!!

மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களின் வங்கி கணக்கில் ஜூலை 15ம் தேதி முதல் ரூ.1000 உரிமைத் தொகை செலுத்தப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2வது கட்ட தொடக்க விழாவில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்