2026 தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும், அந்த கூட்டணியில் நாங்களும் பங்கேற்போம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் நிருபர்களை சந்தித்த அன்புமணி, “2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி தான் நடக்கும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அந்த கூட்டணியில் கண்டிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூட்டணியில் இருப்பவர்கள் ஆட்சியில் பங்கு பெறுவார்கள்; அனைத்து கட்சிகள் அடங்கிய கூட்டணி அமையும்,” என்று கூறினார்.
விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, “தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்,” என்று தெரிவித்தார்.
"மக்கள் பணி செய்ய செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார்" என்று முதல்வர் பேசியது குறித்து கருத்து கூறிய அன்புமணி, "இதே முதல்வர் தான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் பாலாஜியை குற்றவாளி என கூறினார். இப்போது ஜாமீனில் உள்ளவருக்கு முதல்வர் ஏன் இவ்வளவு பாராட்டு கொடுக்கிறார் என்று எனக்கு புரியவில்லை," என்று பதிலளித்தார்.