தனக்கு முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த மனுவை சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் வாபஸ் பெற்றுள்ளார்.
சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவாகவுள்ள பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க முடியாமல் தமிழக போலீசார் தினறிவருகின்றனர். சமீபத்தில், அன்புச்செழியனின் மேனேஜர் முருகன் என்பவரை சென்னை வடபழனியில் போலீசார் கைது செய்தனர்.
மேனேஜர் முருகனிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் அன்புச்செழியன் இருக்குமிடம் குறித்த துப்பு துலங்கியுள்ளதாகவும், மிகவிரைவில் அன்புச்செழியன் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.
அந்நிலையில் அன்புச்செழியன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் 'அசோக்குமார் தற்கொலைக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தாரை தப்பட்டை படத்திற்காக கொடுத்த கடனை 'கொடி வீரன் ' படத்தின் மூலம் தந்துவிடுவதாக சசிகுமார் வாக்குறுதி அளித்திருந்தார். நான் கொடுத்த கடனை திருப்பி மட்டுமே கேட்டேன். நான் மிரட்டியதாக கூறுவதில் எந்த உன்மையும் இல்லை. எனவே அசோக்குமார் தற்கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனக்கு முன் ஜாமீன் தேவை. இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் நேரில் ஆஜராவேன் என்று உத்தரவாதம் தருகிறேன்' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அன்புச்செழியன் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். அன்புச்செழியனை போலீசார் தீவிரமாக தேடி வரும் வேளையில், அவர் திடீரென முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றிருப்பது தமிழ் சினிமா உலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.